It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

மக்களின் வெறுப்புக்கும் உட்பட்ட அரசாங்கம்? - லக்‌ஷ்மன் நிசாந்த

நேற்று முன்தினம் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினரொருவர் பின்வருமாறு கூறுவதைக் கேட்டேன்,

“பொதுவாக, புதிதாக ஆட்சியமைக்கும் அரசாங்கமொன்றின் ‘பொற் காலம்’ அல்லது ‘ஜனரஞ்சக காலம்’ தான் ஆரம்ப நூறு (100) நாட்கள். இந்த அரசாங்கம் தான் ஆரம்ப நூறு நாட்களில் மிகவும் நலிவுற்று, மக்களின் வெறுப்புக்கும் உட்பட்ட அரசாங்கம்” என்று.

நான் இதனை, இந்நாட்டின் அரசியல் கலாசாரத்தில் ஏற்படுத்திய மாற்றத்தின் இன்னுமொரு அம்சமாக காண்கின்றேன்.

ஆரம்ப நூறு நாட்களில் ஜனரஞ்சகம் அடைந்த; பொற்காலத்தை கழித்த எல்லா அரசாங்கங்களும் நாறி குப்பை தொட்டிக்குள் விழுந்து இழுத்து இழுத்து தான் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை கடத்தின, அல்லது ஓரிரு வருடங்களில் வீட்டுக்கு ஓடின.

ஆனால் மிகவும் சிரமமான ஆரம்பத்துடன் சிக்கல்களை கற்று அறிந்துகொண்டும் அவற்றுக்கு முகம் கொடுத்துக்கொண்டும் ஜனரஞ்சகமில்லாதவை ஆயினும் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வுகளைத் தேடிக்கொண்டு பயணிக்க ஆரம்பிக்கும் அரசாங்கமொன்று ஆரம்பத்தில் இல்லாமல்போகும் பிரபல்யத்தை சொற்ப காலம் செல்லும்போது வெற்றிகொள்ளக் கூடிய வாய்ப்பு அதிகமாகும்.

நாட்டில் நிலவும் சில பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அந்த நேரத்தில் எடுக்கக் கூடிய பிரபல்யமில்லாத தீர்மானங்களாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்கு எடுக்கும் நிரந்தரத் தீர்வு என்பது மீண்டும் அதே பிரச்சினை உருவாகாமல் இருப்பதற்கான தீர்வாகும். அரசாட்சிக்கு புதியவர்களான இன்றைய அரசாங்கம் அந்த நுழைவாயிலுக்கு வந்திருப்பதாக கருதுகின்றேன்.

இதுவரை காலம் ஆட்சிசெய்த அராசாங்கங்களின் தெரிவாக இருந்த ‘ஆரம்ப நாட்களின் பிக்அப்புகளும் ஜனரஞ்சகத் தீர்மானங்களினாலும்’ அவற்றுக்கு ஏற்பட்ட கதி பற்றிய தௌிவான புரிதல் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் எதிரணிக்கு தேவைப்படுவது, அரசாங்கத்தைத் தூண்டி அடுத்தடுத்து சிக்ஸர்களை அடிக்கவைத்து சீக்கிரமாக ஆடு களத்திலிருந்து ஓய்வறைக்கு அனுப்புவது. ஏனென்றால் தற்போதைய பொருளாதார சூழலில் கையை வீசி நாலா பக்கத்துக்கும் சிக்ஸர் அடிப்பதற்கு உசுப்பேத்துவதே சீக்கிரமாக ஆட்டத்தை முடிக்கச் செய்யும் ஆசையில் தான். இதனை தற்போதைய பொருளாதார சூழ்நிலை பற்றிய சுமாரான அறிவுள்ளவர் கூட தெரிந்துவைத்திருக்கும் யதார்த்தமாகும்.

இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே எண்ணெய் வரிசை, கேஸ் வரிசை, ரூபா வீழ்ந்துவிடும் போன்ற பேச்சுக்களை உருவாக்கியதும் இதனால்தான். இந்த அரசாங்கம் அவ்வாறான மொக்கு தீர்மானங்கள் ஒன்றிரண்டாவது எடுக்குமென்று எதிரணிகளும் எதிர்பார்த்தன. ஆனால் அவ்வாறான தீர்மானங்களை எடுக்காமலிருப்பது தான் எதிரணியினரை தலையை பிய்த்துக்கொள்ளச் செய்த தலையிடி.

ஜனரஞ்சகமானவை பொன்னானவை இல்லாவிட்டாலும் அரசாங்கம் இவற்றை இவ்வாறே தாங்கிக்கொண்டு முன்னேறுவது எதிரணிக்கு சுபமானதல்ல. ஓரிரு வருடங்கள் இதனை தாங்கிச் செல்வதென்பது அதன் பிறகு எதிரணியினர் பேசுவதற்கு தலைப்பொன்றைத் தேடிக்கொள்ள முடியாத நிலை உருவாகிவிடும் என்பதாகும். இதனால்தான் எதிரணிகள் இந்தளவு அழுத்தங்களைக் கொடுக்கின்றன. 

அரசாங்கத்தின் ஓரிவரின் திமிர் கதைகளும் அறியாமையும் வெளிப்படுவதைத் தவிர,

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எதுவித பதற்றமும் இல்லாமல் எதிரணி வீசும் பந்துகளுக்கெல்லாம் அவர்களுக்குத் தேவையான விதத்தில் அடிக்காமல் ஆடும் இந்த ஆட்டம், பாராட்டுக்குரியது.

சிங்களம்: லக்ஷ்மன் நிஷாந்த

மூல கட்டுரையின் இணைப்பு:

தமிழில்: Hisham Hussain Puttalam 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக