வெலிகம, மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களை, முன்னறிவித்தலின்றி அதிபர் பதவியிலிருந்து விலக்கியமை தொடர்பில், தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகவே பாடசாலையின்
பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பழைய மாணவிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னாள் அதிபர்கள் அவர்கள் தன்னுடைய சேவைக்காலம் நிறைவுபெற்றதும் ஓய்வுபெறுவதை விரும்பாத பெற்றோர்களும், நலன்விரும்பிகளும் அவரை மீண்டும் பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக ஆவன செய்தனர். அதன்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேவை நீடிப்புச் செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப, அவரும் தன்னால் சிறப்பாகப் பணியைச் செய்ததாகப் பெற்றோர் தெரிவித்தனர்.
சென்ற 06 ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் அதிபரிடம், தங்களுக்குரிய காலப்பகுதி நிறைவுபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, அதிபராக பாடசாலை ஆசிரியர் ஒருவரை நியமித்துச் சென்றுள்ளனர் என பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அஜ்மல் ஸத்தார் எமது ஊடகத்திற்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த பாடசாலையைப் பொறுப்பேற்ற முன்னாள் அதிபர் அதன் வளர்ச்சிக்காகப் பல முன்னெடுப்புக்களைச் செய்தார் எனவும், அவரது காலத்தில் பாடசாலையின் அனைத்துப் பெறுபேறுகளும் மிகவும் போற்றத்தக்க முறையில் இருந்ததாகவும், தற்போது உயர்தர வகுப்பில் சீன மொழி கற்பிக்கப்படுவதாகவும், இன்னும் ஓராண்டேனும் அதிபரின் காலம் நீடிப்புச் செய்யப்பட்டிருந்தால் பாடசாலை இன்னும் பல அடைவுகளைக் காணும் எனவும், தற்போதைய அரசாங்கத்தின் அரசியலாளர் ஒருவரின் கையாட்களின் வேலையினாலேயே அதிபர், முன்னறிவிப்பு இன்றி பதவி பறிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
இன்றைய ஆர்ப்பாட்டத்தின் காணொளியைக் காண்பதற்கு இங்கு அழுத்தவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக