சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய சில செய்திகள்
நேற்று (10) ஆம் திகதி, வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா மகா வித்தியாலத்தின் முன்பாக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று நிகழ்ந்தது பற்றி நேற்றைய செய்தியில் எழுதியிருந்தேன்.
அந்நிகழ்வினை ஒலி-ஔிப்பதவு செய்வதற்காக சிங்கள ஊடகவியலாளர்கள் என்ற பேரில் நால்வர் வந்திருந்தனர். பாடசாலையின் பழைய மாணாக்கன் என்ற வகையில் நானும் நிகழ்வில் கலந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். ஒலி-ஔிப்பதிவு செய்து கொண்டிருந்தேன்.
வந்திருந்த ஊடகவியலாளர்கள், அஜ்மல் ஸத்தாரைப்
பேட்டி காணும்போதும், என்னைப் பேட்டி காணும்போதும் இடைமறித்து கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அஜ்மல் ஸத்தார் அவர்கள் சிறப்பாக தனது கருத்துக்களை சிங்கள மொழியில் கருத்துக்களை திறம்படக் கூறிக்ெகாண்டிருக்கும்போது, தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தங்களுக்குத் தேவையில்லாத முறையில் கேள்விகள் கேட்டு அவரைத் திசை திருப்பி, பேரணியையின் கருப்பொருளைத் திசைதிருப்ப முயன்றனர் என்பதை நான் கண்கூடாகக் கண்டேன். கேட்டேன்.'ஊடகவியாலளர்கள்' என்று வந்திருந்தோர் செய்திகளைச் சேகரித்து ஊடகங்களில் ஒலி-ஔிபரப்புவதற்காக வந்தார்களா? அல்லது சமூகத்திற்கு பிழையான செய்தியைக் கொண்டுபோக வந்தார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஊடக தார்மீகம் என்பது இதுதானா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.
அது ஒருபுறமிருக்க,
ஊடகவியலாளர்கள் அல்லாத, ஊடகம் என்றால் என்ன? ஊடக தார்மீகம் என்றால் என்ன? என்று தெரியாத புல்லுருவிகள் சிலரும் இடையே புகுந்து தாங்கள் பெரியவர்கள் என்ற தோதாவில், தங்களது திறன்பேசிகளைக் கொண்டு காணொளிகள் எடுத்துக் கொண்டிருப்பதையும் நன்கு அவதானித்தேன்.
நான் இரவோடு இரவாக செய்திகளை எனது 'பரிவர்த்தனம்' மற்றும் 'தமிழ்ச்சுடர்' தளங்களில் இற்றைப்படுத்திவிட்டேன். 'தமிழ்ச்சுட'ரில் இற்றைப்படுத்திய காணொளி அதிக வரவேற்பைப் பெற்றுவருகின்றது ஒருபுறமிருக்க, அதிகாலை சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் வெலிகம, மதுராப்புர எனும் ஊருக்குப் புகழ்கோத்துவரும் அன்புக்குரிய ஊர்நலன்விரும்பி, தன் குடும்பத்தை விடவும் ஊர் மக்கள் மீதும், ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் அதீத அக்கறை கொண்ட அஜ்மல் ஸத்தாருக்கு சேறு பூசுவதற்காக சிறு சிறு காணொளிகள் பரவின. அவர்களுக்காக ஒருசில விடயங்களையும், அதனைப் பார்த்தோருக்காகச் சில விடயங்களையும் கூறுவதற்கே இந்தக் கட்டுரையை இங்கு இற்றைப்படுத்துகிறேன்.
யாரிந்த அஜ்மல் ஸத்தார்?
அஸ்ஸபா மகா வித்தியாலயம், அறபா தேசிய பாடசாலை என்பவற்றில் கல்வி கற்ற, மிக இளம் வயதிலேயே தன் தந்தை ஏ.ஐ.ஏ. ஸத்தார் அவர்களின் அரசியல் வழியில் தந்தையின் தூண்டுதல் மூலம் அரசியலுக்குள் வந்தவர் அஜ்மல் ஸத்தார்.
தன் தந்தை ஊர்ப் பள்ளிவாசல், அஸ்ஸபா என்பவற்றுக்கும், ஊர் மக்களுக்கும் ஆற்றிய பணியை மனக்கண்களுக்குள் சதாவும் கொண்டுவந்து, தன்னைப்பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் சமூகம், சமூகம் என்று சதாவும் ஆற்று வௌ்ளமாக ஓடிக்கொண்டிருப்பவர் அஜ்மல் ஸத்தார்.
அஸ்ஸபா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனாக இருந்த நேரத்திலும் அவர் பாடசாலைக்காக தன்னாலான பங்களிப்புக்களை நல்கி வந்தவர். பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளராக இருந்து, ஏனைய உறுப்பினர்களின் உதவிகளையும் பெற்றுக் கொண்டு, அல்லும் பகலும் அஸ்ஸபாவிற்காக அயராது உழைத்தார். ஊர் உறங்கும் வேளையிலும் அஜ்மல் ஊருக்காக விழித்துக் கொண்டிருந்தார். தனது தூக்கத்தைக் கலைந்து சமூகத்தின் ஊக்கத்திற்காக சமூகத்தோடு ஒன்றித்தவர்.
பாடசாலை வீழ்ந்து கொண்டு வந்தபோது, பாடசாலைக்குத் தகைமிக்க, தரமான அதிபர் ஒருவரைப் பெற்றெடுப்பதில் அதீத கவனம் செலுத்தினார். சக உறுப்பினர்களுடன் அன்றாடம் உரையாடி, பாடசாலையின் முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். ஹிப்ளர் அவர்களைப் பெற்றெடுத்தார்.
அதிபருடன் அன்றாடம் பேசிக்கதைத்து, பாடசாலையின் முன்னேற்றத்திற்காக வழிசமைத்தார். அதிபரும் தனது வீடாகப் பாடசாலையை நினைத்து, பாடசாலைச் சமூகத்தினரின் வெற்றிக்காக பல்வேறு பணிகளைத் துவங்கினார்.. சீரிய வெற்றியும் கண்டார்.இன்று அஸ்ஸபா கல்வித் துறையிலும், பௌதீக வளத்திலும் முன்னணியில் நின்று கொண்டிருக்கின்றதை புல்லுருவிகள் உட்பட அனைவரும் நன்கறிவர் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. அவரது சேவைக்கால நீடிப்பு மாணாக்கரின் நலன்கருதியே என்பதையும் அவர்கள் அறியாதவர்கள் அல்லர். பாடசாலையினதும், ஊரினதும் வளர்ச்சி அவர்களுக்கு சகிக்க முடியாதன என்பது பற்றியும் பெரும்பாலானோரும் அறிவர்.
ஊரின் வீதிப்புனரமைப்பு, பள்ளிவாசல் சார்ந்த விடயங்கள், மஸ்ஜிதுல் பலாஹ் மத்ரஸா மட்டுமன்றி சுருங்கச் சொன்னால் யாரேனும் ஒருவரது மரணம் நிகழ்ந்தால்கூட -- பிரேத பரிசோதனைக்காக மரணங்கள் வைக்கப்பட்டிருந்தால்கூட கால தாமதமின்றி வீட்டுக்குக் கொண்டுவரச் செய்பவர் அஜ்மல் ஸத்தார்.
ஏன் கிளம்பினரோ இந்தப் புல்லுருவிகள்?
அஜ்மல் ஸத்தாரின் அதீத வளர்ச்சியைப் பொறுக்கவியலாத சில உள்ளூர்வாசிகளும், சில வௌியூர்வாசிகளும் தங்களால் எதுவும் சாதிக்கவியலாது என்பதைத் தெரிந்து கொண்டும், தங்களால் ஊர் மக்களுக்கு எதுவும் செய்யவியலாது என்பதை அறிந்துகொண்டும் ஆங்காங்கே சில விசமத்தனங்களைச் செய்து 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து' வருகின்றனர். அஜ்மல் சமூகத்தில் பெற்றுள்ள வெற்றிகளையும், அவர்மீது சமூகம் கொண்டுள்ள பேரபிமானத்தையும் சகிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். ஏதேனும் 'க்கண்ணாக்கள்' இருக்கின்றனவா அஜ்மலின் பெயருக்கு இழிப்பெயர் சேர்க்க? என்று கண்ணாய் இருக்கிறார்கள்.
இன்று நேற்று முளைத்த சில சின்னக்கணக்குகளும், அரசியல், சமூகம், பாடசாலை பற்றி அறியாத சிலரும் இதில் உன்னிப்பாய் இருப்பதை நாம் அறிவோம்.
இவர்கள் என்னதான் சதிவலைகளை விரித்தாலும், தூர நோக்குடன் பயணிக்கும் அஜ்மலை இறைவனன்றி எவராலும் வீழ்த்தவியலாது. அவர் ஊர் மக்களுக்காக தனிப்பட்ட ரீதியில் செய்த பணிகள்... களப்பணிகள் எண்ணிலாதன. பயன்பெற்றவர்களின் உள்ளார்ந்த நன்றிகள்.. அவர்களின் இறைஞ்சுதல்கள் அவருக்காக எழுந்து நிற்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணப்பாடு.
புல்லுருவிகளைக் கண்டும் காணாதது போல், நழுவிச் செல்வதும், அநீதி இழைத்து, சமூகத்தைத் திசை திருப்பி, அஜ்மலின் தனிப்ட்ட சுயலாபத்திற்கே எல்லாம் என்று அறைகூவி நிற்போருக்கு காலம் பதில் அளிக்கும்.
சேர்ந்தே குழி பறிப்போரில் அஜ்மலும் கவனம் செலுத்த வேண்டும். கூடவே, காணும் காட்சிகளிலெல்லாம் உண்மைத்தன்மையில்லை என்பதை சமூகமும் கருத்திற் கொண்டால், எமது ஊர் மின்னி வருவதையோ,.... அஸ்ஸபா உயர்ந்து வருவதையோ யாராலும் தடுக்கவியலாது என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
'உன்னால் செய்ய இயலாது விட்டால் ஒதுங்கி நில்...
செய்பவர் செய்வதை அவதானித்து நீலிக் கண்ணீர் வடி'
இவை முழுமையாக எனது கருத்துக்களேயன்றி, இறைவன் மீது ஆணையாக எவரதும் தூண்டுதல் அல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன்.
-தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
1000 % உண்மை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கு💯
பதிலளிநீக்குWelcome
நீக்கு