ஒவ்வொரு செய்திக்கும் ஒரு முகம் மட்டுமே பொதுவெளியில் தோன்றுகிறது. ஆனால், அதன் பின்னால் மறைந்திருக்கும் இன்னொரு பக்கம் பெரும்பாலும் பேசப்படுவதில்லை.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகக் கவனம் பெற்றுள்ள ஒரு பதிவும், அதனைத் தொடர்ந்து வெளிவந்த கருத்துகளும், இலங்கை விளையாட்டு வரலாற்றில் மீண்டும் ஒருமுறை “நியாயம் – அதிகாரம் – சம வாய்ப்பு” என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.
தேசிய மட்டத்தில் ஸ்குவாஷ் விளையாடிய அனுபவம் கொண்ட ஒருவர், தன்னுடைய நேரடி அனுபவத்தின் அடிப்படையில் முன்வைத்துள்ள கருத்துகள் பலரையும் சிந்திக்க வைத்துள்ளன.
அவரது கூற்றின்படி, ஒரு காலகட்டத்தில் பெண்கள் தேசிய ஸ்குவாஷ் விளையாட்டில் பலர் உச்ச நிலையில் இருந்தனர். அவர்களில் சிலர் உண்மையான திறமையால் உயர்ந்தவர்கள்; சிலர், அமைப்புக்குள் கிடைத்த வெளிப்படையான ஆதரவால் முன்னிலைப்படுத்தப்பட்டவர்கள்.
குறிப்பாக, ஒரு வீராங்கனைக்கு ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஆதரவு இயல்பை விட அதிகமாகக் கிடைத்ததற்கான காரணமாக, அவளுடைய தந்தை தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தது சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தச் சூழ்நிலை, அவளுடைய விளையாட்டு வாழ்க்கையை உயர்த்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி இன்று எழுகிறது.
பொது நலவாய விளையாட்டுகளுக்கான வீராங்கனைத் தேர்வின் போது,
தேர்வுப் போட்டிகளில் தோல்வியடைந்தபோதும், அந்த வீராங்கனை அனுப்பப்பட்டதாக கூறப்படும் தகவல், விளையாட்டு நியாயத்தின் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த நேரத்தில் வெற்றி பெற்றவர்கள், பேசுவதற்கான மேடையின்றி மௌனத்தில் தள்ளப்பட்டனர்.
ஃபதூம் இஸ்ஸடீன் – கேள்விக்குறியாகிய ஒரு சாதனை
இந்த விவாதத்தின் மையத்தில் நிற்பவர், Fathoum Zaleeha Issadeen –
எமது தேசத்தின் பெருமைமிக்க ஸ்குவாஷ் வீராங்கனை.
-
2019, 2020, 2021 – மூன்று முறை தொடர்ச்சியான National Champion
-
தெற்காசிய விளையாட்டுகளில் இரண்டு முறை Bronze medalist
இத்தனை சாதனைகளுக்குப் பிறகும், பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கத் தயாராக இருந்த தருணத்தில், அவருடைய பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.
மேலும் வெளிவரும் தகவல்களின்படி, Commonwealth trials இல் கூட, தற்போது பேசு பொருளாகியிருக்கும் அந்த மாணவி சனித்மா ஷினாலி, ஃபதூமிடம் தோல்வியடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
அப்படியானால்,
-
ஃபதூம் ஏன் அணியில் இடம் பெறவில்லை?
-
அவர் விளையாட்டை விட்டு விலகினாரா?
-
அல்லது விலக நிர்ப்பந்திக்கப்பட்டாரா?
அந்த காலகட்டத்தில், தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக பேசுவதற்கான வெளி ஃபதூமுக்கு கிடைக்கவில்லை. Publicity crisis-இல் சிக்க விரும்பாததால்,
விளையாட்டை விட்டு விலகி வீட்டுக்குள் முடங்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
இன்று எழும் கேள்விகள்
இன்றைக்கு,
அதே அமைப்புகள்,
அதே அதிகாரப் பதவிகள்,
அதே பெயர்கள் –
மீண்டும் ஒரு சர்ச்சையின் மையமாக மாறியுள்ளன.
இதனை தனிநபர் தாக்குதல் எனக் குறுக்கிப் பார்க்க முடியாது. இது ஒரு அமைப்பின் செயல்முறை, விளையாட்டில் சம வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்ற கேள்வி, சாதனைக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான முரண்பாடு.
நீதிமன்றங்கள் திறந்திருக்கின்றன. ஆனால் அதற்கு முன், உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டும். விளையாட்டு துறையில் நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
ஏனெனில், ஒவ்வொரு கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல,
ஒவ்வொரு மௌனத்துக்கும் பின்னாலும் சொல்லப்படாத ஒரு வலி இருக்கிறது.
-----------------------
ஃபதூமின் சகோதரன் முகநூலில் எழுதியிருந்த சிங்களப் பதிவின் நியாயம் கருதியே, அவரது கூற்றுக்களைக் கைக்கொண்டு, இந்தப் பதிவு 'PARIWARTHANAM' இல் இற்றைப்படுத்தப்பட்டது.
-----------------------
- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்







0 கருத்துகள்:
கருத்துரையிடுக