It

சனி, 21 நவம்பர், 2026

நான் என் ஆசனத்திலிருந்து எழுந்தது அவளது மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் கௌரவிப்பதற்காகவே! - அக்குரட்டியே நந்த நாயக்க தேரர்

“😍 நான் என் ஆசனத்திலிருந்து எழுந்தது அவளது மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் கௌரவிப்பதற்காகவே” என நாயக்க தேரர் தெரிவித்த நெகிழ்ச்சியான வெளிப்பாடு!

உபசம்பதாவில் மூத்த பிக்கு ஒருவருக்குத் தவிர, இல்லறத்தாரைக் கண்டால் ஆசனத்திலிருந்து எழாதிருப்பதே பிக்கு மரபாக இருந்தபோதிலும், கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற்ற ருகுணு பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், அந்த மரபைக் கடந்த அதிநெகிழ்ச்சியானதும் தனித்துவமானதுமான

ஒரு நிகழ்வு வரலாற்றில் இணைந்தது. அறிஞர் அவைக்கு முன்னால் அமர்ந்திருந்த ருகுணு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், அக்கமஹா பண்டிதருமான கலாநிதி அக்குரட்டியே நந்த நாயக்க தேரர், தமது வேந்தர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று, உடல் ரீதியான குறைபாடுகளுக்கு மத்தியிலும் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரி மாணவி ஒருவருக்குப் பட்டச் சான்றிதழை வழங்கியமையே அதுவாகும்.

மூன்று அல்லது நான்கு வருட பல்கலைக்கழகக் கல்வியின் இறுதிப் பலனை வேந்தரின் திருக்கரங்களால் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்கள் அறிஞர் மண்டபத்திற்கு வந்துகொண்டிருந்த வேளையில், உடலால் பலவீனமாக இருந்தபோதிலும் மனதாலும் இதயத்தாலும் தளராத ஒரு மாணவி, சிரமத்திற்கு மத்தியிலும் உறுதியான திடசங்கல்பத்துடன் முன்னோக்கி அடி எடுத்து வைத்தார். அவர் தம் அருகில் வந்த உடனேயே அக்குரட்டியே நந்த நாயக்க தேரர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்று அந்தத் துணிச்சலான மாணவிக்குப் பட்டச் சான்றிதழை வழங்கினார். தேசிய கீதத்திற்குத் தவிர வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் பிக்குகள் ஆசனத்திலிருந்து எழாத நிலையில், தேரரின் இந்த அடக்கமான செயல் முழு அவையின் கௌரவத்தையும் கவனத்தையும் ஈர்த்தது.

தாம் ஆசனத்திலிருந்து எழக் காரணமாக அமைந்த விடயத்தை விளக்கிய ருகுணு பல்கலைக்கழக வேந்தர் தேரர், தாம் எழுந்தது அவளது மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் கௌரவிப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். அவருக்கு உதவ இருவர் இருந்தபோதிலும், “நான் தனியாகத்தான் பட்டம் வாங்கப் போகிறேன், நீங்கள் வர வேண்டாம்” என்று கூறி அவர் தனியாகவே வந்ததாகவும், எழுதுவதற்குச் சிரமப்பட்ட மற்றும் குரல் தெளிவற்ற நிலையிலிருந்த அவருக்கு வாய்மொழிப் பதில்களை வேறொருவர் மூலம் எழுத அனுமதியளித்து, ஒரு குடும்பத்தைப் போல ருகுணு பல்கலைக்கழகம் அவரிடம் கருணை காட்டியதாகவும் தேரர் தெரிவித்தார்.

நிறைகுடம் ததும்பாது என்பதைத் தமது செயலால் நிரூபித்துக் காட்டிய அக்குரட்டியே நந்த நாயக்க தேரர், நாட்டின் கல்வி மற்றும் சாசனத் துறைகளில் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்ற மாபெரும் அறிஞராவார். வெளிவிட்டியே சோரத, பத்தேகம பியரதன, கனெகம சரணங்கர போன்ற மாபெரும் யதிகளை உருவாக்கிய காலி பத்தேகம அக்குரட்டிய கிராமத்தில் பிறந்து, அரசவைப் பண்டிதர் அக்குரட்டியே அமரவங்ச நாயக்க தேரரின் சீடராகத் துறவறம் பூண்ட தேரர், காலி வித்யாலோக பிரிவெனாவில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்றார்.

பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் இணைந்து, பத்தேகம சமித தேரர் மற்றும் பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரர் போன்ற யதிகளுடன் கல்விப் பணிகளில் ஈடுபட்ட நந்த தேரர், அக்காலத்தில் அனைவரின் மதிப்பிற்கும் பாத்திரமான 'சிந்தக' சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். வித்யாலங்கார பல்கலைக்கழகத்தில் கௌரவ இளங்கலை (BA Hons), முதுகலை (MA) மற்றும் மெய்யியல் முதுகலை (MPhil) பட்டங்களைப் பெற்ற தேரர், தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் (Chulalongkorn) பல்கலைக்கழகத்தில் கலாநிதி (PhD) பட்டமும் பெற்று, இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார்.

மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாவின் விரிவுரையாளர் பதவியிலிருந்து தமது கல்விப் பணியைத் தொடங்கி, சிங்கள அகராதியின் முதன்மைப் பதிப்பாசிரியர் பதவி வரையிலும், இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் மஹோபாத்யாயராகவும் அவர் சிறப்பான சேவையாற்றினார். தற்காலத்தில் ருகுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு மேலதிகமாக, வித்யோதய பிரிவெனாவின் பணிப்பாளர், காலி வித்யாலோக பிரிவெனா மகா விகாராதிபதி, மகாவம்ச தொகுப்புக் குழுவின் தலைவர் மற்றும் உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் உப தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கும் தேரர், மியன்மார் அரசாங்கத்தின் 'அக்கமஹா பண்டித' பட்டத்தாலும் கௌரவிக்கப்பட்டவராவார்.

கீழைத்தேய மற்றும் மேற்கத்தேயக் கல்விப் பயிற்சிகளைச் சிறப்பாகப் பெற்ற இத்தகைய மகத்தான அறிஞர், அனைத்துத் தடைகளையும் வென்று பட்டம் வென்ற இல்லற மாணவியின் உறுதியின் முன்னால், முற்றிய நெற்கதிர் போல அடக்கமாக வணங்கி ஆசனத்திலிருந்து எழுந்து கௌரவம் செலுத்தியமை, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாக அமைகிறது.

மொழிபெயர்ப்பு - கலைமகன் பைரூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக