"ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது... தற்காலிக ஊழியர்... ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை... மாதத்திற்கு 20 நாட்கள்..."
இந்தக் காரணங்களைக் கூறி ஒரு ஊழியரின் EPF மற்றும் ETF உரிமைகளைப் பறிக்க முடியுமா?
குறுகிய பதில் — பொதுவாக முடியாது.
இலங்கையின் தனியார் துறை ஊழியர் ஒருவரின் EPF/ETF உரிமையைத் தீர்மானிக்கும் போது, அவரது ஒப்பந்தத்தில் உள்ள "Temporary", "Casual" அல்லது "Contract" என்ற பெயர் மட்டுமே பார்க்கப்படுவதில்லை. ஊழியர் உண்மையில் ஒரு வேலை வழங்குநரின் கீழ் வேலை செய்து சம்பளம் பெறும் ஊழியரா என்பது மிகவும் முக்கியமானதாகும்.
"தற்காலிக ஊழியர்" என்பதால் EPF/ETF இழக்கப்படுவதில்லை
ஒருவர் நிரந்தர ஊழியராக இல்லாமல் தற்காலிக அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும், அந்த நிலை மட்டுமே EPF/ETF செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் அல்ல.
அதுபோலவே, Casual (தற்செயல்) ஊழியராகவோ அல்லது Contract basis (ஒப்பந்த அடிப்படை) ஊழியராகவோ இருப்பது தானாகவே EPF/ETF உரிமையை ரத்து செய்யாது.
"ஒப்பந்த அடிப்படை" என்பது EPF/ETF இலிருந்து விலக்கு அல்ல
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேலை வழங்குநர்,
"நீங்கள் permanent (நிரந்தரம்) அல்ல."
"நீங்கள் contract basis (ஒப்பந்த அடிப்படை)."
"சில மாதங்களுக்கு மட்டும்தான்."
"ஆகையால் EPF/ETF கிடையாது."
என்று கூறக்கூடும். ஆனால் ஒப்பந்தத்தில் இடப்பட்டுள்ள பெயர் மட்டுமே தீர்மானகரமானதல்ல.
ஊழியர் நிறுவனத்திற்காக எவ்வாறு வேலை செய்கிறார், யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளார், சம்பளத்தைப் பெறுவது எப்படி மற்றும் வேலைவாய்ப்பு உறவின் உண்மையான தன்மை என்ன என்பது முக்கியமானது.
ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தால்?
இதுவும் முக்கியமான ஒரு கேள்வியாகும்.
ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் EPF/ETF உரிமை ரத்து செய்யப்படாது.
உதாரணமாக: மாதத்திற்கு 20 நாட்கள் × ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்யும் நபர் ஒருவர் நிறுவனத்தின் ஊழியராகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தால், "4 மணி நேரம் மட்டும்தான்" என்ற காரணத்தைக் காட்டி EPF/ETF செலுத்தாமல் இருப்பது சரியா?
EPF பங்களிப்பு எவ்வளவு?
வழக்கமான EPF பங்களிப்பு:
ஊழியர் — 8%
வேலை வழங்குநர் — 12%
அதற்கமைய மொத்த EPF பங்களிப்பு 20% ஆகும்.
ஊழியரின் 8% சம்பளத்திலிருந்து பிடிக்கப்படலாம், ஆனால் வேலை வழங்குநரின் 12% ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட முடியாது.
ETF பங்களிப்பு எவ்வளவு?
ETF க்காக வேலை வழங்குநர் 3% செலுத்த வேண்டும்.
மிக முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால்: ETF 3% ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட முடியாது. இது முழுமையாக வேலை வழங்குநர் ஏற்க வேண்டிய பங்களிப்பாகும்.
ஒரு தெளிவான உதாரணம்
ஊழியரின் சம்பந்தப்பட்ட மாத வருமானம் ரூ. 50,000 எனக் கொள்வோம்.
EPF 8% (ஊழியர் பங்களிப்பு) — ரூ. 4,000
வேலை வழங்குநரின் EPF 12% — ரூ. 6,000
ETF 3% — ரூ. 1,500
இந்நிலையில், ஊழியரிடமிருந்து பிடிக்கக்கூடிய EPF பகுதி ரூ. 4,000 ஆகும். மேலும், வேலை வழங்குநர் தனது சொந்தச் செலவில் EPF ரூ. 6,000 + ETF ரூ. 1,500 செலுத்த வேண்டும்.
எனவே நினைவில் கொள்ளுங்கள்!
Temporary (தற்காலிகம்) ஆவது,
Contract basis (ஒப்பந்த அடிப்படை) ஆவது,
Casual (தற்செயல்) ஆவது,
மாதத்திற்கு சில நாட்கள் மட்டும் வேலை செய்வது,
ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் வேலை செய்வது,
போன்ற காரணங்கள் தனித்தனியாக EPF/ETF உரிமையை ரத்து செய்யும் காரணங்கள் அல்ல.
ஆகையால், "நிரந்தர ஊழியர் அல்லாததால் EPF/ETF கிடையாது" என்ற கூற்றைக் கேட்கும்போது, சட்டத்தையும் உங்களது உண்மையான வேலைவாய்ப்பு உறவையும் சரிபார்ப்பது அவசியமாகும்.
உங்கள் உரிமைகளை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
சட்டம் தெரிந்தால் உங்களை எளிதில் தவறாக வழிநடத்த முடியாது.
சட்டம் உங்களது உரிமை
சட்டத்தை அறிவோம் • உரிமைகளைப் பாதுகாப்போம் • நியாயமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.
- சிங்களப் பதிவொன்றையும், ஊழியர் சேமலாப நிதி சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் துணையாகக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.
உங்கள் சந்தேகங்களை கீழே எழுதுங்கள்...
- மொழிபெயர்ப்பாளர், கலைமகன் பைரூஸ்






0 கருத்துகள்:
கருத்துரையிடுக