It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 22 நவம்பர், 2024

சிறுபான்மைச் சமூகத்திலிருந்து அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை வலிதான விமர்சனத்திற்குரியதே!

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரோ வடக்கு கிழக்குத் தமிழர் ஒருவரோ நியமிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மிக வலிதானது. அது நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

இதை இனமைய அரசியல் (Etno-centric Politics) என்ற தளத்தையும் தாண்டி, விரிந்த பொருளில் நோக்க வேண்டும்.
நேற்று மாலை வரை இதற்கு அவகாசம் இருந்தது. பிரதி அமைச்சர்களது நியமனத்தோடு, இதுவும் நடைபெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர்களது நியமனம் இன்னும் முழுமை பெறவில்லை என்ற தொனிப்பட கருத்துக் கூறியிருந்தமை, இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருந்தது.
போதிய அவகாசம் கொடுத்து, பொறுத்திருந்து பார்த்து விட்டே இதை எழுதுகிறேன்.
பேராசிரியர் நுஃமானும் Nuhman Mohamed நானும், நேற்று முன்தினம் கண்டியிலுள்ள அவரது வீட்டில் இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஆங்கில நிலைத்தகவலையும் இதன் தொடர்ச்சியாக இணைத்திருக்கிறேன்.
தவறைத் தவறு என்று சொல்வதே சரியான அரசியல் நிலைப்பாடாக அமையும்.
✨✨✨
அரசாங்கம் (Government) என்பது சட்டவாக்கத் துறை (Legislature), நிர்வாகத் துறை (Executive Arm), நீதித் துறை (Judiciary) என்ற 3 பிரதான பிரிவுகளைக் கொண்டது.
இதன் ஒரு அலகான நீதித் துறையில், யாரும் இன ரீதியாக அல்லது பிரதேச ரீதியாக பங்கு கேட்பதில்லை. சட்ட ஆட்சி (Rule of Law) நிலவும் நாடொன்றில், நீதித் துறை அதற்கே உரிய சுயாதீனத்தோடுதான் இயங்க வேண்டும்.
ஆனால், சட்டவாக்கத் துறையில் ஆள்புல/பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம் (Territorial Representation) அல்லது சமூக ரீதியிலான பிரதிநிதித்துவம் (Community Representation) அவசியம்.
பலநாடுகளில் பிராந்திய ரீதியான பிரதிநிதித்துவ முறையே காணப்படுகிறது. பெல்ஜியத்தில் சமூகப் பாராளுமன்றம் (Community Parliament) என்ற சிறப்பு ஏற்பாடு உண்டு. உலகின் பல நாடாளுமன்றங்களில்/ அரசியலமைப்புகளில் இதுபோன்ற பல்வகை ஏற்பாடுகளைக் காண முடியும்.
அரசாங்கத்தின் பிரதான நிர்வாகப் பிரிவுதான் (Executive Arm)
அமைச்சரவை. அங்குதான் நாட்டைப் பாதிக்கும் மிக முக்கியமான நிர்வாக ரீதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ஆதலால், அமைச்சரவையில் பன்மைத்துவம்/ பல்லினத்தன்மை (Plurality/ Diversity) பிரதிபலிக்க வேண்டும்.
அது குறியீட்டு ரீதியாக (Symbolic) அல்லாது, அர்த்தபூர்வமான பிரதிநிதித்துவமாக (Meaningful Representation) அமைதல் வேண்டும். அப்போதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் (Representative Democracy) என்பதன் ஆழ்பொருள் சரியாகப் பிரதிபலிக்கும்.
கட்டமைப்பு சார்ந்த உள்ளீர்ப்புப் பண்பை வெளிப்படுத்துவது, பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் பணியும் கடப்பாடும் ஆகும்.
அத்தோடு, இதனை வெறுமனே உள்நாட்டு அரசியல் சூழமைவோடு (Political Context) தொடர்பான பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.
இலங்கையின் வெளிநாட்டு வேலை வாய்ப்போடும் அந்நிய செலாவணி ஈட்டத்தோடும், மத்திய கிழக்கும் வளைகுடா நாடுகளும் மிகவுமே தொடர்புபட்டுள்ளன. இந்தப் பின்புலத்தில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் வகிபாகம் மேலும் கூர்மையாக கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
அதுவும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில், இதற்கான தேவை இன்னும் கூடுதலாக உணரப்பட்டிருக்க வேண்டும்.
அத்தோடு பூகோள- பிராந்திய அரசியலில் (Geo-politics), வடக்கு கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவத்தின் பங்குக்கு அரசியல் கனதி அதிகம். அதுவும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மேலைத்தேய நாடுகளோடுதான் இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் (Export Economy) பெரிதும் தங்கியிருக்கிறது. அந்த நாடுகளுடனான பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியான உறவாடலுக்கும், இந்தப் பல்லினப் பிரதிபலிப்பு நிச்சயம் துணை செய்யும். அந்த வகையில் இது சர்வதேச உறவோடும் (International Relations) தொடர்புபட்ட ஒரு பிரச்சினை என்றால் அது மிகையாகாது.
இவை குறித்து உரிய தரப்பினர் பலருக்கும் சுட்டிக் காட்டிய பின்னரே இதை எழுதுகிறேன். என்னாலான முயற்சிகளை எடுத்து விட்டு, போதிய கால அவகாசம் கொடுத்து விட்டே இதை இங்கு பதிவு செய்கிறேன்.
அரசியலில் பன்மைத்துவம் பற்றிய புரிதலோடு நகர்வதே ஆரோக்கியமானது. பாரியளவு ஏற்றத் தாழ்வு நிலவும் இந்திய சமூகக் கட்டமைப்பை அம்பேத்கர் அணுகிய விதத்திலும், அவர் தலைமையில் வரையப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் உள்ளடக்கத்திலும், இது தொடர்பில் நமக்குப் பல பாடங்களும் படிப்பினைகளும் உள்ளன.
அதிகாரத்தில் இருப்போர் சிந்திக்கும் முறையில் மாற்றம் தேவை. நீண்ட இனத்துவ அரசியல் வரலாறு கொண்ட இலங்கையை மீள வடிவமைக்கும்போது, நிலைமாறு காலகட்ட (Transition Period) யதார்த்தங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கற்பனா ரீதியான யுடோப்பியாக் கனவுகளை விட, நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள் (Pragmatic Approach) மிகமிக இன்றியமையாதவை.
இந்தத் தவறு, அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் சீர்செய்யப்பட வேண்டும்.

பொறுப்புணர்வுடன்,
சிராஜ் மஷ்ஹூர்
22.11.2024

0 கருத்துகள்:

கருத்துரையிடுக