It

Monday, August 27, 2018

பழி வாங்குதல் - ஜீ. பீ. சேனாநாயக்க (சிறுகதை)

   
பியசேன சோமாவுடன் சேர்ந்ததன் பின்னர் மீண்டும் ஓவியம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இதற்கு முன்னர் அவனுக்கு ஓவியம் கற்பித்த அவனது ஓவிய ஆசிரியர், எதிர்காலத்தில் அவன் ஒரு சிறந்த ஓவியனாக வருவதாகக் கூறினார். அவனது ஓவியங்களைப் பார்வையிட்டோர் ஓவியனொருவனிடத்தில் இருக்கவேண்டிய வெற்றிப் பண்பென்ற ஒன்று அவனிடத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். என்றாலும் ஓவியத்தில் குறிப்பிடத்தக்க அளவு தேர்;ச்ச் பெற்றதன் பின்னர் அவன் ஓவியம் வரைவதை நிறுத்திக் கொண்டான். பியசேன பலவீனமான நரம்பு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதால் அவனுக்கு எதனையும் தொடர்ந்து செய்ய முடியாதிருப்பதாகவும், அதனால்தான் அவன் ஓவியம் வரைவதை விட்டுவிட்டான் என்றும் அவனைத் தெரிந்த சிலர் சொன்னார்கள்.

    சோமா சாதாரண உயரத்தைக் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்கவள். உள்ளத்தை ஈர்த்தெடுக்கும் உருவத்தை உடையவளாக இருந்தாலும், அவள் சாதாரணமாக அழகிகள் வரிசையில் இடம்பெற்றிருக்கவில்லை. பொன்னிறத்தோடு ஒட்டிய அவளது வெண்ணிற முகம் சிறு குழந்தையொன்றின் முகம் போல வட்ட வடிவமாக இருந்தது. சோகங்களுக்குக் காரணமில்லாத நேரங்களில்கூட அவளது முகத்தில் சோக ரேகைகள் படர்ந்திருந்தன.


    பெண்ணொருத்தியின் உண்மையான அழகை அவன்மீது உண்மையான காதல் கொண்ட ஒருவனால் மட்டுமே காணமுடியும் என பியசேன பல சந்தர்ப்பங்களில் சொன்னான். அவளது உடல் அழகு மட்டுமா அவனுக்க அழகாகக் காட்சியளிக்கும்? அவளது ஆத்மானவுடனான உள்ளமுந்தான் காதலனுக்குக் காட்சியளிக்கும் என்று அவன் சொன்னான். சோமாவின் முகத்தைப் பார்க்கும்போது தன்னை ஆட்டிப் படைக்கும் அவளது உடல் உறுப்புக்களை விடவும் காதல் நிறம்பிய அவளது நிர்மலமான உள்ளம் என்றும், மீண்டும் அவன் ஓவியம் வரைவதற்கான காரணம் அவளில் தான் காண்கின்ற உள்ளார்ந்த அழகை ஓவியமாய் மிளிரச் செய்வதற்குமே என அவன் அவளிடம் சொன்னான்.


    பியசேன பணக்கார இளைஞன். சோமாவின் பெற்றோர் அவனைப் போன்ற பணம் படைத்தவர்களாக இல்லாதிருந்தபோதும், ஏழைகள் அல்ல. பியசேன சோமாவைத் திருமணம் செய்ததன் பின்னர் கொழும்பை அண்மித்த பகுதியொன்றில் தனக்கு உரித்தான ஒரு பழைய வீட்டில் வாழ்வதற்காகச் சென்றான். அதிகமான அறைகளுடன் கூடிய பரந்து விரிந்ததாக அந்த வீடு கட்டப்பட்டிருந்தது. வீட்டு விராந்தைக்கு அருகில் கட்டப்பட்டிருந்த அறையொன்றை அவன் ஓவியம் வரைவதற்கான அறையாகத் ஒதுக்கிக் கொண்டான். 


    திருமணம் செய்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவன் சோமாவின் உருவத்தை வரையத் தொடங்கினான். தனது கணவன் ஓவியம் தீட்டுவதில் வல்லவன் என்ற கருத்து சோமாவின் உள்ளத்தில் பூத்தது. ஒவ்வொரு நாளும் காலையில், பியசேன அவளைத் தன் முன்னே கதிரையொன்றில் உட்காரவைத்து, ஓவியம் வரையத் தொடங்குவான். அதற்கு முன்னர் எந்தவொரு ஓவியனும் சோமாவின் உருவத்தை வரையாததால், ஓவியத்தை வரைந்து முடியும்வரை அவள் பொறுமையின்றிப் பார்த்திருந்தாள். அவன் அவசரமாக ஓவியத்தை வரைந்து முடிக்காததால் அவள் அவனைக் குற்றம் சொன்னாள். 


    உருவத்தை வரையும் அறைக்கு சோமா வரக்கூடாது என்று, ஓவியம் வரையத் தொடங்கி இரண்டு கிழமைகளின் பின்னர் காலைப் பொழுதொன்றில் பியசேன அவளுக்குச் சொன்னான். 


    ‘இப்போது சோமாவைப் பார்க்காமலேயே உருவப்படத்தை வரையலாம் . அதனால் வரத் தேவையில்லை’ எனச் சொல்லிக் கொண்டே அவன் அறைக்குச் சென்றான். 


    ‘சரி பரவாயில்லை. நான் சும்மா வாரன். பியசேன ஓவியம் வரைவதைப் பார்த்துக் கொண்டிருக்க ஆசையாக இருக்கிறது’ சோமா பியசேனவைத் தொடர்ந்து சென்றவாறே சொன்னாள். 


    ‘வேண்டாம், படம் வரையும் அறைக்கு எக்காரணம் கொண்டும் வர வேண்டாம். அறைக்கு வந்தால் உங்களால் வாயை வைத்துக்கொண்டு இருக்க முடியாது. கதைக்கத் தொடங்கினால் என்னால் படத்தை வரைய முடியாது போகும்’


    ‘நான் கதைக்க மாட்டேன். நான் ஒரு சொல்லாவது சொல்லாமல் இருப்பன்’ மிகவும் கெஞ்சலாக அவள் சொன்னாள். 


    ‘முடியாது. கோபப்பட வேண்டாம். அறைக்கு வரவிட முடியாது’ அவன் அழுத்தமாகவே சொன்னான். 


    அவளது கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவளத உதடுகள் ஆத்திரத்தினால் துடித்தன. அவள் பேசுவதற்கு முயற்சி செய்தாள் என்றாலும் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. அவள் வழிந்தோடும் கண்ணீரோடு அவன் நின்ற இடத்திலிருந்து வேகமாக நகர்ந்து சென்றாள். 


    பியசேன எதுவுமே பேசாமல் ஓவியம் வரைகின்ற அவனது அறைக்குள் நுழைந்து வெளியால் திறக்க முடியாத வண்ணம் அறைக் கதவை மூடிக்கொண்டான். 


    அவன் பகல் சாப்பாட்டுக்காக அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவள் அவனுடன் கதைக்கவில்லை. தன்னோடு சேர்ந்து சாப்பிடுவதற்காக பியசேன அவளைக் கூப்பிட்டபோதும் அவள் எதுவும் சாப்பிடாமல் மேசையின் பக்கமாக அவள் உட்கார்ந்திருந்தாள். அன்று அவள் எதுவுமே சாப்பிடவில்லை. அவனுடன் கதைப்பதற்கும் அவள் விரும்பவில்லை. அடுத்தநாள் அவள் சாப்பிட்டபோதும் அவளது கோபம் தணியவில்லை. 


    அடுத்த நாள் பியசேன படம் வரையும் போது, அவள் கதவிற்குத் தட்டி. தனக்கு உள்ளே வரவிடுமாறு பணிவாகக் கேட்டுக்கொண்டாள். என்றாலும் அவள் அறைக்குள் வருவதை அவன் விரும்பவில்லை. 


    அதன் பின்னர் அவள் அழுகையை நிறுத்தியபோதும் தான் அறைக்குள் வருவதற்கு இடமளிக்குமாறு அடிக்கடி வேண்டுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. 


    ஓவியம் வரையத் தொடங்கி ஏறக்குறைய ஐந்து வாரங்களாயின.
    ஒருநாள் பகல் நேரமொன்றில் தன்னைச் சந்திக்கவந்த நண்பனொருவனுடன் பியசேன விராந்தையில் கதைத்துக் கொண்டிருந்தான். வீட்டு முன்பக்கத்தில் ரேந்தையொன்றைப் பின்னிக் கொண்டிருந்த சோமா அடிக்கடி அவர்கள் கதைப்பதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
    தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியதொரு ஓவியத்தை வரைந்து முடித்ததாக பியசேன தன் நண்பனிடம் சொல்வது சோமாவின் கேட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓவியம் வரைந்து முடிவடைந்ததை அறிந்து கொண்டதால் அவளது சந்தோசம் மேலும் அதிகரித்தது. ஒருபோதும் அவன் தனது ஓவியத்தைக் காட்ட மாட்டான் என்று அவள் நினைத்தாள். அவனுக்குத் தெரியாமலேயே அந்த ஓவியத்தைப் பார்வையிட அவள் முடிவு செய்தாள். 


    அன்று மதியம் பியசேன ஏதோவொரு காரணத்திற்காக வெளியே சென்றான். வீட்டில் தோட்டத்தை நோக்கி திறக்க முடியுமான பெரியதொரு பலகணியொன்று ஓவியம் வரையும் அறைக்கு இருந்தது. இந்த பலகணியைத் உடைத்துத் திறந்து ஓவியத்தைப் பார்ப்பதற்குத் நினைத்தாள் சோமா. சமையலறையிலிருந்து விறகு வெட்டும் பெரியதொரு கத்தியைக் கொண்டு, தோட்டத்திற்கு வந்தாள். மூடியிருந்த பலகணியின் கதவுகளுக்கு இடையே கத்தியைப் போட்டு பலகணியின் இணைப்பலகைகளை உடைத்தாள். அவள் பொறுமையாக இல்லாததால் நடுநடுங்கி விரல்களினால் பலகணியின் மூடிகளைத் திறந்தாள். அதற்குப் பின்புறமாக கண்ணாடி யன்னல் ஒன்று இருந்தது. அது உட்புறமாக மூடியிருந்தது. கண்ணாடி யன்னலின் பின்புறமாக நீல நிறத் துணியலான திரையொன்று இருந்ததால் அறையிலிருந்த எதுவும் அவளுக்கு எதுவும் தென்படவில்லை. அவளது பொறுமையற்ற தன்மை மேலும் வலுப்பெற்றது. அவள் அந்தப் பெரிய கத்தியினால் ஜன்னலை உடைத்தாள். உடைந்த கண்ணாடிகளின் இடையே கையைவிட்டு திரையைச் சற்று விலக்கி, யன்னல் ஓட்டையினூடாக முகத்தைப் போட்டு இரு கண்களினாலும் அறையெங்கும் அலசினாள். அவளது கண்கள் ஏதோவொன்றில் பட்டு அப்படியே குத்திநின்றது. அது மெல்ல மெல்ல விசாலமானது. பேயொன்றைக் கண்டது போல அவளது கண்களைப் பயம் பற்றிக் கொண்டது. அவளது இருதயத் துடிப்பு வேகமானது. அவளது மார்புகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கின. மெதுவாகத் திறந்த அவளது உதடுகள் காய்ந்து போயின. யன்னல் ஓட்டையின் இடையே முகத்தை உள்நுழைத்து இவ்வாறு பார்த்திருந்த அவளது வாயிலிருந்து பயங்கரச் சத்தமொன்று வெளியேறியது. 


    அவள் பயந்த முகத்தோடு யன்னல் பக்கத்திலிருந்து வெளியேறி, பைத்தியம் பிடித்த ஒருத்தியைப் போல வீட்டிற்குள் வேகமாக ஓடிச்சென்றாள். அவள் தனது படுக்கை அறைக்குச் சென்று கதவினை மூடிக்கொண்டாள். அன்று இரவு எட்டு மணியளவில் பியசேன வீட்டுக்கு வரும்போது சோமாவைக் காணவில்லை. அவள் அந்தியிலிருந்து தூங்குவதாக வேலைக்காரி அவனிடம் சொன்னாள்.


    படுக்கையறையின் கதவு மூடப்பட்டிருந்ததால், அவன் கைகளினால் கதவுக்குத் தட்டினான். ஆனாலும் உள்ளேயிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அறையினுள்ளே அமைதி குடிகொண்டிருந்தது. அறையினுள்ளே எந்தவொரு வெளிச்சமும் இல்லை என்பதை பியசேன கதவுத்துளையூடாகத் தெரிந்துகொண்டான். 


    அவன் கதவை உடைத்துக்கொண்டு அறைக்குச் சென்றான். அவன் அறையினுள்ளே இருந்த மின் விளக்கினை ஏற்றி, அங்குமிங்கும் பார்த்தான். கால்கள் இரண்டும் கீழே விழுமாறு சோமா கட்டில் பக்கமாகச் சாய்ந்திருந்தாள். கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த முக்காலியின் மேலே கடிதமொன்றும், அதற்கு அருகிலேயே சிறியதொரு போத்தலும் இருந்தது. சிறிய போத்தலை கண்டவுடனேயே அவன் அதனை இனம் கண்டுகொண்டான். 


    அவன் முக்காலிப் பக்கமாகச் சென்று, அறையின் கதவுக்குப் பக்கமாக நின்ற வேலைக்காரர்கள் இருவரும் காணாத வண்ணம் கடிதத்தைக் காற்சாட்டையினுள் போட்டுக் கொண்டான். வேகமாக அவன் கட்டிலிலிருந்த சோமாவை சோதித்துப் பார்த்தான். அவள் அவள் சோபையிழந்து இறந்து கிடந்தாள். 


    அறைக்கு வெளியே வந்த அவன், தனது மனைவி நஞ்சு குடித்து இறந்துகிடப்பதாக பொலிஸிற்கு அறிவிக்குமாறு தனது வேலைக்காரர்களில் ஒருவனுக்குச் சொன்னான். 


    அவன் தனது ஓவிய அறைக்குச் சென்று அங்குள்ள மின்குமிழைப் பற்றவைத்து இணைப்புப் பலகைகைளை போட்டு கதவை மூடிக்கொண்டான். யன்னலின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை அவன் கண்டான்.
    அவன் காற்சட்டையிலிருந்து கடிதத்தை எடுத்து மெல்ல மெல்ல வாசிக்கத் தொடங்கினான். 


    அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.


    ‘உங்களிடத்தில் எனக்குள் உள்ள காதல் இதை எழுதும்போது கூட ஒரு சிறிதும் குறையவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள வேண்டும். என்றாலும் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதனால்தான் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். நீங்கள் என்மீது சந்தேகம் கொண்டுள்ளதை நீங்கள் வரைந்த ஓவியத்தின் மூலம் அறிந்துகொண்டேன். உங்கள் ஏமாற்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவள் நான் மட்டுமே என்பதை நான் அறிவேன். அதைக் கண்டவுடனேயே உங்களிடம் நான் சொல்லியிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லியிருந்தால் நீங்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் அதைச் சொல்லும் அளவு தைரியத்தை நான் பெறவில்லை. அது நடந்ததை நீங்கள் கண்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது. நீங்கள் அதைக் காணாதிருந்தால் அது பற்றி நான் உங்களிடம் சொல்லியிருக்கத் தேவையில்லை எனவும் எனக்குத் தோன்றியது. நீங்கள் என்னிடம் பலி வாங்குதவற்காக இந்த சூழ்;ச்சியைச் செய்துள்ள கொடூரமானவர் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். என்றாலும் உங்களைப் போல ஏமாற்றப்பட்ட எவரும் இப்படியான கொடூரமானவராக மாறக்கூடும் என நான் நினைக்கிறேன். 


    ‘ஓவியம் வரையும் அறைக்குள் நான் உள்ளே வரக்கூடாது’ என்று நீங்கள் சொன்னது, அது நடந்த மற்றைய நாளேதான். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தது பற்றி இப்போது சொல்லித்தான் ஆக வேண்டும். 


    நிமல் எனது அம்மாவின் சகோதரனின் மகன் என்பதால் அவன் எனது பெற்றோரின் வீட்டுக்கு அடிக்கடி வந்தான். என்னைக் காதலிப்பதாக அடிக்கடி என்னிடம் அவன் சொன்னாலும் ஒருபோதும் நான் அவனைக் காதலிக்கவில்லை. 


    நான் அவனைக் காதலிப்பதில்லை என்று நான் அவனுக்குச் சொன்னாலும், அவன் இரகசியமாக எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை. எனக்காக இவ்வளவு கவலைப்படுகின்ற அவன்மீது எனக்குள் அதிக அனுதாபம் ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது நடந்தது எனது அனுதாபம் ஒருபோது மேலெழுந்தபோதுதான்.


    நீங்கள் அவனிடம் சந்தேகப்படக்கூடும் என்று அதனால்தான் நினைத்தேன். நான் உங்களைத் திருமணம் முடித்த பின்னர், அடிக்கடி என்னைப் பார்க்க வர வேண்டாம் என்று அவனுக்கு நான் கூறியுள்ளேன். அதன் பின்னர் அவன் சட்டக் கல்லூரியிலிருந்து கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தான். அவன் வாழ்க்கையில் நொந்துபோய் அலைந்து திரிந்தான். 


    ‘நான் உங்களுடன் திருமணமானதற்குப் பின்னர் அவன் பல தடவைகள் இந்த வீட்டுக்கு வந்தான். அவன் இந்த வீட்டுக்கு கடைசியாக வந்த நாள் அல்லாமல், அவன் வந்த எல்லச் சந்தர்ப்பங்களிலும் நீங்கள் வீட்டில் இருந்தீர்கள். அச்சந்தர்ப்பங்களில் நீங்கள் இருந்ததால் அவன் என்னோடு பேசாமல் இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். கடைசியாக அவன் இங்கு வரும்போது நீங்கள் வீட்டில் இருக்கவில்லை. அவன் வரும்போது, நான் எனது படுக்கையறைக்கு அருகில் உள்ள அறையில் உடுப்பொன்று தைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு அவன் மகிழ்ச்சியில் இருப்பதை நான் அறிந்து கொண்டேன். அவன் நான் அமர்ந்திருந்த சோபாவின் பக்கமாக வந்து அமர்ந்துகொண்டான். அவன் என்னை முழு மனதோடு காதலிப்பதாகவும் நான் அவனைக் காதலிக்காததால் அவன் அலைக்கழிந்துள்ளதாகவும் அவனது எதிர்காலம் என்னால் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவன் என்னிடம் சொன்னான். எனது திருமணத்தின் பின்னர் தனது வீட்டிலிருந்து பைத்தியம் பிடித்தவன் போல மாறியுள்ளான் என்பது எனக்குத் தெரியவந்தது. நான் திருமணமான பெண் என்பதால் என்னுடன் காதல் வார்த்தைகள் பேசவேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். அப்போது அவன் என் கால்கள் பக்கமாக வந்து முழங்காலில் நின்று, தன்னைக் காதலிக்குமாறு கண்ணீர் தோய்ந்த கண்களோடு கைகூப்பி நின்றான். என்னால் சித்தப்பிரமை பிடித்து சோர்ந்து போயுள்ள அவனது முகத்தைப் பார்க்கும்போது எனக்குள் அனுதாபம் ஏற்பட்டது. அது எனது புத்தியை இழக்கச் செய்துள்ளது என்று என் அடிமனது எனக்குச் சொன்னது. நான் பலமாக அவனது தலையை இரண்டு கைகளாலும் பற்றி, அவனுக்கு முத்தம் கொடுத்தேன். அப்போது யாரோ ஒருவர் வீட்டிற்குள் நடமாடுவது எனக்குத் தெரிந்தது. நீங்கள் வீட்டிற்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எனக்கு ஏற்பட்டது. அவசரமாக எழும்பி அறையிலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் விராந்தையில் இருப்பதைக் கண்டேன். நீங்கள் விராந்தையில் இருந்ததனால் நீங்கள் அதனைக் கண்டிருக்க மாட்டீர்கள் என நான் நினைத்தேன். நீங்கள் நிமலுடன் சுமுகமாக பேசியதனாலும், நீங்கள் சந்தோசமாக இருந்ததனாலும் பெரிதாக எனக்குள் சந்தேகம் ஏற்படவில்லை. நான் நிமலுடன் இருந்ததைக் கண்டதன் பிறகு நீங்கள் விராந்தைக்குப் போயிருக்கலாம் என்பதை நான் அறிந்து கொண்டது யன்னலை உடைத்துப் படத்தைப் பார்த்ததன் பின்னர்தான். ஓவியம் வரையும் அறைக்கு வரவேண்டாம் என்று நீங்கள் சொன்னது அது நடந்த அடுத்தநாள் என்று நான் மேலே சொன்னேன். நான் அந்த அறைக்கு வரவேண்டாம் என்று நீங்கள் கட்டளையிட்டது எதற்காகவென்றால், அதுவரை வரைந்திருந்த என்னுடைய உருவப்படத்தை அழித்து வேறொரு படத்தை வரைவதற்காத்தான். நீங்கள் அழித்துள்ள ஓவியத்திலும் எனது படம் உள்ளது. என்றாலும் அது என்னுருவப்படம் மட்டுமே கொண்ட ஓவியம் அல்ல. நானும் நிமலும் முத்தமிட்டுக்கொண்டு, கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டும் படம். இன்று அந்தப் படத்தைக் கண்டதும் என்னுள் ஏற்பட்ட சோகத்தையும், பயத்தையும் என்னால் தெளிவுபடுத்த முடியாது. முதலில் நீங்கள் வரையத்தொடங்கியது எனது உள்ளம் எனும் உள்ளார்ந்த அழகை வெளிக்காட்டவே. நான் நிர்மலமான காதலுடன் கூடிய பெண்ணொருத்தி என்ற நினைப்பினால்தான். என்றாலும், நான் காமத்திற்கு அடிமைப்பட்ட பெண்ணொருத்தி என்று நிமலுடன் தொடர்புற்ற நிகழ்வினால் ஏமாற்றமடைந்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது. ஓவியம் வரைந்து முடிந்துவிட்டது என்று நீங்கள் உங்கள் நண்பரிடம் சொன்னது எனக்கு அது கேட்கவேண்டும் என்ற நம்பிக்கையில் என நான் நினைக்கிறேன். நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றுகூட நீங்கள் நினைத்திருக்கலாமோ எனக்குத் தெரியவில்லை.’


    கடிதத்தை வாசித்து முடித்த பியசேன தீக்குச்சியொன்றைப் பற்றவைத்து கடிதத்தை எரித்தான். அவசரமாக அவன் சோமாவையும் நிமலையும் இனங்காட்டும் படம் முழுமையாக மறையும்படியாக நீலச் சாயத்தைப் பூசினான்.


    அறையிலிருந்து வெளியே வந்த அவன், பொலிஸ் அதிகாரிகள் வரும்வரை விராந்தையில் நடந்துகொண்டிருந்தான்.


-தமிழில் - கலைமகன் பைரூஸ்

கருத்துரைகள்

1. எனக்கு சிங்களம் வாசிக்கவோ எழுதவோ தெரியாது. பேசுவதும் முறையான முறையில் முடியாது. ஆயினும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். உங்கள் தமிழ் அறிவை நான் அறிவேன். அதனால் சுமூகமாக தமிழ் ஆக்கித் தந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன். உங்களை ஊக்குவிப்பது நமது கடமை.எனவே வாழ்த்துக்கள். ஜீ .பீ . சேனநாயக்க அந்நாட்களில் முக்கிய சிங்கள எழுத்தாளராக கவனிக்கப் பட்டவர். அதனால் உங்கள் தமிழாக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க.

-KS Sivakumaran  

நன்றி - ஜீவநதி 121 -

ஐப்பசி 2018 (பரணீதரன்)