“விடுதிக்குச் சென்ற முதல்நாளே எங்களுக்கு சாரம் அணிந்துகொண்டு விடுதியின் அறைக்கு வருமாறு சொன்னார்கள். அதன்பிறகு இரண்டாம் வருட மாணவர்கள் வந்து, சாரத்தை கழற்றுமாறு எங்களுக்குச் சொன்னார்கள். எங்கள் எல்லோரினதும் சாரங்களைக் கழற்றி
வேறாக வைத்தார்கள். மாணவர்களாகிய நாங்கள் சத்தம் போடுவது கேட்காத வண்ணம் பெருஞ்சத்தத்துடன் பாட்டுப் போட்டிருந்தார்கள்.”
இது நாவல் ஒன்றின் ஒரு பகுதியன்று. இலங்கைப் பல்கலைக்கழகமொன்றினது மாணவனொருவனின் கதையின் ஆரம்பம். இம்முறை நாங்கள் யாரும் கதைக்காத சத்தியத்தை உங்கள்முன் சொல்லவிழைகிறோம். இது யாரும் சொல்லாத, சொல்ல வெட்கப்படுகின்ற, சொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, சொல்வதற்கே பயப்படுகின்ற தலைப்பொன்று. “பல்கலைக்கழக பகிடிவதை”

பகிடிவதைக்கு உள்ளானார் எனக் கூறப்படுகின்ற பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சென்றவாரம் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப டுமளவிற்கு ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதையும் சிலர் சரிகாண்கின்றனர். மனிதாபிமானமற்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்படுவதைக் கருத்திற்கொண்டே சிலர் பல்கலைக்கழக உயர்கல்வியை வெறுக்கின்றனர் என்பதை நாங்கள் சொல்லித்தான் அறியவேண்டியதில்லை.

இலங்கைப் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்ற மாணவனொரு வரின் கதையே பகிடிவதை தொடர்பான கதையின் ஆரம்பம். அது கதையின் தொடக்கம் மட்டுமே. எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் எல்லா பீடங்களிலும் (பிரிவுகளிலும்) நிலைமை இதுவன்று. மொ ரட்டுவ உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் கடும்போக்குடைய பகிடிவதை கிடையாது. 

பல்கலைக்கழகங்களின் எல்லா மாணவர்களும் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவதில்லை. பகிடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பலர் பல்கலைக்கழகங்களில் உள்ளனர். பகிடிவதை வழங்பகும் தன்மை பல்கலைக்கழகங்களுக்கிடையே வேறுபடுகின்றது. பகிடிவதை பற்றி இங்கு பேசுவதற்குக் காரணம், மாணவர்கள் பல்கலைக்கழகங்களை வெறுத்து ஒதுக்குவதற்காகவன்று. மாறாக, பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இல்லாதொழிய வேண்டும் என்பதற்காகவே. இதுதான் தொடர்ந்த இக்கட்டுரையின் இறுதிப்பகுதி.

“எந்நாளும் இரவுகளில் எங்களை இவ்வாறு விடுதியின் குறித்த அறைக்கு அழைப்பார்கள். ஆரம்ப நாட்களில் நாங்கள் அறைக்கு சாரம் உடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். அங்கு அவர்கள் சாரத்தை அவிழ்க்கக் கூறுவார்கள். அதன்பிறகு அது மாற்றமடைந்தது. நாங்கள் சாரம் இல்லாதவர்களாகவே அறைக்கு வரவழைக்கப்பட்டோம். அதன்பிறகு எங்கள் குழுவினர் ஒருவருக்கொருவர் மர்ம உறுப்பை பரீட்சிக்க வேண்டும். இரண்டாம் வருட மாணவர்களும் பரீட்சிப்பார்கள். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் “ஒவ்வொரு” விடயங்களைச் செய்யுமாறு அதட்டுவார்கள். அவ்வாறு செய்யாதவிடத்து, அடித்து உதைப்பார்கள். அந்த அறையில் ஒரு மின்விசிறிகூட இல்லை. மாணவர்களின் வியர்வைத் துளிகளே நிலத்தில் நீராக ஓடும். 


அவ்வாறான துன்புறுத்தல்கள் முடியும்போது அதிகாலையாகும்.  அதன்பிறகு நாங்கள் பெண்கள் விடுதிகளின் அருகாமைக்குச் அதிகாலையிலேயே செல்ல வேண்டும். எங்கள் குழுவினர் விடுதியிலிருந்து வெளியே வந்ததன் பின்னர், நாங்கள் அவர்களை விரிவுரை மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 


தொடர்ந்து மூன்று மாதங்கள் எங்களை இவ்வாறு துன்புறுத்தினார்கள். அதன் பிறகு “ஹொஸ்ட”லில் எங்களை ஆடையில்லாமல் வாளிகளுக்கு அசுத்தமான நீர் அள்ளிவந்து குளிப்பாட்டினார்கள். அதற்கு பெயர் வேறு இருந்தது. “ஹொஸ்டல் பக்கட்” என்பது அதன் பெயர். அத்துடன் பகிடிவதை முடிந்துவிடும். அந்தப் பகிடிவதை முடிவுறுதவற்கு, இரண்டு வாரங்கள் வெள்ளைச் சட்டையும், கறுப்பு காற்சட்டையும் அணிந்து செல்ல வேண்டும். ஒரே உடுப்பையே தொடர்ந்து இருவாரங்களும் அணிந்து செல்ல வேண்டும். இரு வாரங்களும் ஆடைகளைக் கழுவக் கூடாது. இரண்டாவது வாரம் முடியும் போது துர்நாற்ற ஆடைகளுடன். அலங்கோலமாக மிருகங்கள் போலவே நாங்கள் செல்வோம்.


அதன் பிறகு, பல்கலைக்கழக ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் கூப்பிட்டார்கள். ஆண்பிள்ளைகளின் காற்சட்டைகளைக் கழற்றி, உள்ளாடையுடன் நீர்வாளிகளில் நீரை வீசிக் குளிப்பாட்டினார்கள். பிறகு உள்ளாடைகளின்றி காற்சட்டை அணிவித்தார்கள்.


அதற்கு அடுத்த நாள், இரண்டாம் வருட மாணவர்கள் எங்களுக்கு விருந்தளிப்பார்கள். “பாட்டி” என்ற பெயரில் அவர்கள் எங்களுக்குக் கொஞ்சம் சாப்பிடத்தருவார்கள். அதற்கு “சோஷல்” என்று பெயர். அதற்குப் பிறகு நாங்கள் அவர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். அதற்குப் பெயர் “டீடர்ன் பார்ட்டி” என்பது. புதிய மாணவர்களாகிய நாங்கள் பணம் சேர்த்து, நல்ல “போத்தல்கள்” வாங்கி, அவர்களுக்குக் குடிக்கவும், சாப்பிடவும் கொடுக்க வேண்டும். ”


இவ்வாறு குறித்ததொரு பல்கலைக்கழகத்தின் மாணவரொருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக, மற்றொரு பல்கலைக்கழகத்தின் பகிடிவதை பற்றிச் சொல்லவிழைகிறோம்.  அதனை மாணவியொருவர் சொன்னார்.


“நாங்கள் உயர்தரம் சித்தியடைந்து பெரும் எதிர்பார்ப்புக்களுடனேயே “கெம்பஸ்” வந்தோம். ஆயினும், இங்கு வந்தபின்னர் எனக்கு “கெம்பஸ்” வேண்டாம் என்றாயிற்று. எங்கள் அமானுஷ்யமான பகிடிவதைகள் தந்தார்கள். நாங்கள் இரண்டாம் வருட மாணவர்களுக்கு தலைதாழ்த்திச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யவில்லையாயின் கன்னத்தில் பளார் என்று அடிவிழும். அவ்வாறு செய்யவில்லையாயின், மண்ணில் அல்லது சிறுகற்கள் நிறைந்த இடத்தில் முழங்காலில் நிற்கவைப்பார்கள்.


அதன்பின்னர் ்“தஸகலா அபிசேகம்” என்றவொன்றைச் செய்வார்கள். அது ஓர் அறையில் செய்யப்படும். அங்கு சுவர்களில் பெண்களின் உருவங்களும் ஆண்களின் உருவங்களும் வரையப்பட்டிருக்கும். சிதைந்த மனநிலையில் உள்ள மேனிலை மாணவர்கள் சிலர்தான் இந்தக் கைங்காரியத்தைச் செய்வார்கள். பெண் பிள்ளைகளுக்கு ஆண் உருவப்படங்களுடன் “சிற்சில” விடயங்களைச் செய்துகாட்டுமாறு சொல்வார்கள். அதேபோல எங்களுக்கு  “அம்மண” வார்த்தைகளாலான பெயர்களைச் சூட்டுவார்கள்.


அதற்குப் பிறகு “பிங்குண்டன் ஆட்டம் ஆடச் செய்தல்” “டெண்ட் அடித்தல்” எனும் இன்னுமொரு “ரேக்” இருக்கிறது. அதாவது, பகிடிவதைக் காலத்தில் நாங்கள் இடுப்புப்பட்டி அணிவது தடை. சிரேஷ்ட மாணவர்களில் சிலர் அடிக்கடி எங்களைச் சோதனை செய்வார்கள். பிறகு எங்களை ஆண்பிள்ளைகள் இருக்கின்ற இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள். பல்கலைக்கழகத்தில் நான் இருக்கும்போது, நான் சந்தித்த பெரும் அமானுஷ்யமான (மனிதாபிமானமற்ற) நடவடிக்கை அதுதான். அதனை பொதுவெளியில் சொல்ல முடியாது. எங்களோடு இருந்த சிலருக்கு  இச்செயலினால் பல்கலைக்கழகமே வேண்டாம் என்றாயிற்று.”


பல்கலைக்கழக பகிடிவதை எனும் சித்திரவதையின் தன்மையை அந்த மாணவியின் கதையிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள்.


மேலே குறிப்பிட்டது போன்று, பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினர் பகிடிவதைக்கு எதிர்ப்பாகவே உள்ளனர். பகிடிவதையை செயற்படுத்துபவர்கள் ஒருசிலர் மட்டுமே. பிரச்சினை என்னவென்றால், பகிடிவதைக்குள்ளானவர்களில் சிலர், தாங்கள் அனுபவித்த பகிடிவதையை புதியவர்களிடம் கொடுப்பதுதான்.


பகிடிவதை பற்றி பல்கலைக்கழக மாணவர்களிடமும், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினோரிடமும் இதுபற்றி நாம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் பகிடிவதையைக் கண்டித்தே பேசினர். என்றாலும், பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினர்.


சங்க ரம்புக்வெல்ல கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்து, சென்ற வருடம் வெளியேறியவர். தனது பெயரை வெளிக்காட்டியே அவர், பகிடிவதை பற்றிக் கூற முன்வந்தார். அவர் பகிடிவதை பற்றிக் குறிப்பிடும்போது,


“நான் பல்கலைக் கழகத்தில் இணைந்தது 2011 ஆம் ஆண்டு. உயர்தரப் பரீட்சை எழுதி, அதில் சித்தியடைந்ததும் சத்தியமாக முதலில் நினைவுக்கு வருவது “ரெகிங்”. ரெகிங் பற்றி அந்த அளவுக்கு சமூகத்தில் தாக்கம் செலுத்தியிருந்தது. அதேபோன்ற சமூகத்தில் பெரும்பாலானோரும் விரும்பாத, ஏதோ ஒருவகையில் விரும்பப்படுகின்ற ஒன்றாகவே எனக்கு ஆரம்ப நாட்களில் தோன்றியது. 
பல்கலைக்கழகத்திற்கு வந்ததும், ரெகிங்கை இருவேறு விதமாகக் காணமுடிந்தது. ஒன்று உளரீதியாகச் செய்யக்கூடிய ரெக். அடுத்தது உடலியல் ரீதியாகச் செய்யக்கூடிய ரெக். உளரீதியான பகிடிவதையில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் பெண்பிள்ளைகளே. இதன் மூலம் ஆண் பிள்ளைகள் உளரீதியான உளைச்சலுக்கு உள்ளாக மாட்டார்கள் என்று கருதக் கூடாது. 

மிகச் சிறப்பாக பேசுவதிலிருந்து கடுமையான “அம்மண”ச் சொற்களால் ஏசிப்பேசுவது வரையில், உளரீதியாக துன்புறுத்தல் நடக்கும். உளரீதியாக எனும்போது அடித்து உதைத்தல், முழங்காலில் நிறுத்துதல், பிறந்த மேனியுடன் நிறுத்துதல் போன்றன நடக்கும். அதிகமாக ஆண் பிள்ளைகள்தான் இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு (ரெகிங்களுக்கு) ஆளாவர். இதுதவிர, முதலாண்டு “சோஷல்” முடிவுறும்வரை தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவது, பல்கலைக்கழகத்தினுள் தங்களுக்கு விருப்பமான முறையில் நடமாடுவது என்பனவும் புதியவர்களுக்கு இல்லாமற் போகும். இந்த முறை பல்கலைக்கழகங்களுக்கிடையே வேறுபடும்.


ரெக் என்றதும் பெரும்பான்மையினர், இரண்டாம் வருட மாணவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முதலாம் வருட மாணவர்களுக்கு ரேக் கொடுப்பதாகவே நினைக்கின்றனர். உண்மையில் நிலை அதுவல்ல. ஒரு சிலர் ஒன்றிணைந்தே ரெக் கொடுக்கின்றனர். சிலவேளை ஒவ்வொரு பிரிவையும் சேர்ந்த பத்துப் பதினைந்துபேர் ஒன்றிணைந்து இதனைச் செய்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள் அமைதியாகவே உள்ளனர்.

அதேபோன்று சமூகத்தில் வேரோடியிருக்கின்ற எண்ணுதற்கு அரிதான கருத்தொன்று உள்ளது. அது என்னவென்றால், அரசியல் கட்சியொன்று அல்லது பல ஒன்றிணைந்துதான் இந்த பகிடிவதையை வழங்குகின்றது என்பது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவன் என்றவகையில் இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எந்தவொரு கட்சியுடனுடம் தொடர்புபடாதவர்களும் மாணவர்களுக்கு பகிடிவதை கொடுக்கிறார்கள் என்பதை நான் நன்கறிவேன். 

கடைசியாக சொல்லவிருப்பது என்னவென்றால், பகிடிவதை கொடுக்கின்றவர்கள் தாங்கள் அதற்கு நியாயம் கற்பிக்க முனைவது பற்றியாகும். அவர்கள் அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் பகிடிவதைக்குள்ளாகுபவர்களுடன் நட்பினை வளர்க்கவே இந்தப் பகிடிவதை என்கின்றனர். உண்மையில் முதலாவது வருடம் ஒன்றாக இருந்தாலும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடங்களில் மாணவர்கள் எல்லோரும் குறிப்புக்களின் பக்கமே ஓடுகின்றனர். எந்தவொரு நட்பும் இல்லை. இதன் மூலம், பகிடிவதையை நியாயப்படுத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை என்பது புரிகின்றதல்லவா? எனது  சொந்தக் கருத்து என்னவென்றால் ஒழுக்கங்கெட்ட பைத்தியங்கள் சிலவற்றின் கருத்தியலுக்கான செயற்றிட்டமே ரெக் என்பது. தற்போதைய உலகிற்கு இந்த கோத்திரவாதம் ஒத்து வரவே வராது. 

சங்க குறிப்பிட்டதற்கேற்ப, பல்கலையில் பெரும்பாலான மாணவர்கள் பகிடிவதைக்கு எதிரானவர்களே. கோத்திரவாத சிந்தனை மனப்பாங்குள்ள ஒரு சிலரே பகிடிவதையை முன்னுக்குக் கொண்டுபோக முயற்சிக்கின்றனர். சென்றவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டுமே. 

நான்கு மாடி விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழ்மாடி வரை தினந்தோறும் முழங்காலால் ஏறிச்செல்லவும், இறங்கிச்  செல்லவும் கட்டளையிடப்பட்டது. அதன் பிரதிபலிப்பாக, பகிடிவதையைச் சகிக்கவியலாமல் ஒரு மாணவன் மனநாேயாளியானான். மாணவர்கள் நால்வரின் குத வழியாக ப்ளாஸ்டிக் குழாய் அனுப்பப்பட்ட செய்தியும் அண்மையில் வெளியானது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தற்போது பகிடிவதை இல்லை என்ற நிலை இருந்தபோதும், சிதைந்த மனோநிலையை உடைய ஒருசிலர் அவ்வப்போது இருக்கத்தான் செய்கின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாமற் செய்வதற்கு சட்டமூலம் கொண்டு வந்தார்கள். அது 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் மாற்று வழிகளில் குற்றச் செயல்களைத் தடை செய்தல் எனும் சட்டமூலமாகும். பகிடிவதையை நிறுத்துவதற்கு பல்வேறு சட்டதிட்டங்கள் இருந்த போதும் பெரும்பாலும் நடைபெறுவது என்னவென்றால், அந்த சட்டதிட்டங்கள் விதிமுறைகள் என்ற போர்வையில் மாணவர்களை அடக்கியாள்வதே நிகழ்கின்றது.  
இன்றைய நவீன சமூகத்தில் பல பகிடிவதைச் சம்பவங்கள் சமூக ஊடகங்கள் மூலம் காட்சிகளுடன் வெளியாகின்றன. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இன்னும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. நிர்வாகக் குற்றங்களுக்காக குரல் கொடுக்கும் மாணவர்களுக்கு இடைநீக்கம் போன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டாலும் உண்மையில் மாணவர்களைத் துன்புறுத்தும் மாணவர்கள் அத்தகைய தண்டனைகளைப் பெறுகிறார்களா என்பது பிரச்சினையாகவே உள்ளது. பழைமைத்துவமான இந்தப் பகிடிவதையைநிறுத்த, பல்கலைக்கழக சமூகம் முதலில் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

மாணவர் சங்கங்களும் நிர்வாகங்களும் குற்றவாளிகளைப் பாதுகாக்கப்படுகின்றன.

மலிங்க பிரசாத்- ஒரு பல்கலைக்கழக பட்டதாரி, பகிடிவதைக்கு எதிராகச் செயற்பட்டவர்.  
“இது போன்ற கொடுமைகள் தொடர பல்கலைக்கழக நிர்வாகம் அடைக்கலம் கொடுக்கிறது. குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடந்த வருடங்களில் பல சம்பவங்கள் இடம்பெற்ற போதும் அதனை மறைக்க முயன்றார். பல பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர்களின் துன்புறுத்தல் சம்பவங்களை மறைக்கவும், நிர்வாகப் பணிகள் தங்கள் நிர்வாகக் காலத்தில் அனைத்தும் சிறப்பாகவே நடந்தன எனச் சுட்டிக்காட்டவும் நிர்வாகம் விரும்புகிறது.

இந்தச் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த மாணவர் அமைப்புகள் அதிகம் விரும்புவதில்லை. ஏனெனில் கொழும்பு, பேராதனை, ஜயவர்த்தனபுர, களனி போன்ற பல்கலைக்கழகங்களில் நடந்த பல சம்பவங்களில் புதிய மாணவர்களைத் துன்புறுத்தியவர்களின் பக்கம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இருந்தது.
கொடுமைப்படுத்துதலால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமாக யாரும் இல்லை. எனவேதான் வீதியில் இறங்கி கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம், அவர்கள் கூட்டாக பல்கலைக்கழகத்தில் புதியவர்களை துன்புறுத்துகிறார்கள்.

பகிடிவதை மூலம் கொடுமைப்படுத்தப்பட்ட சிலர் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய சோககதை. அண்மையில் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளுக்காக நிர்வாணமாக்கப்பட்டு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு சேற்றில் குளிக்கவைக்கபட்டுள்ளார். அதுபற்றி அவர் தெரிவிக்கும்போது, 'தன் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் அந்நாள்' என்று ஒரு குறிப்பைப் போட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

(முற்றும்)

-தமிழில் - கலைமகன் பைரூஸ்